- இந்தியா
- ஆப்கானிஸ்தான் சோதனை
- சண்டிகர் மைதானம்
- சண்டிகர்
- ஆப்கானிஸ்தான்
- மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சண்டிகர்
நியூசண்டிகர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்த ஒரு டெஸ்ட், நியூசண்டிகர் மகாராஜா யாதவேந்திரசிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக துணை கேப்டன் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ஒன்டவுனாக சாய்சுதர்சன் களம் இறங்குவர். கேப்டன் சுப்மன்கில் 3வது இடத்திலும், ரிஷப்பன்ட் 4வது இடத்திலும் ஆடலாம். ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தருடன் அறிமுக வீரராக ஹர்ஷ் துபே இடம்பெறக்கூடும். சுழலில் குல்தீப்யாதவ், வேகப்பந்து வீச்சாளர்களாக சிராஜ், பிரசித்கிருஷ்ணா களம் இறங்குவர்.
ஒருநாள் மற்றும் டி.20 ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஐசிசி ரேங்கில் முதலிடத்தில் உள்ள இந்தியா, டெஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் தென்ஆப்ரிக்காவிடம் 2-0 என தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் பழைய வெற்றி நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
மறுபுறம் டெஸ்ட் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான், இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 2, அயர்லாந்து, வங்கதேசத்திற்கு எதிராக தலா 1 என 4ல் வென்றுள்ளது. 7ல் தோற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட்டில் டிரா செய்தது. இந்தியா போன்ற வலுவான அணிகளை இதுவரை வீழ்த்தியதில்லை. இதனால், இம்முறை வெற்றிக்கு போராடும். ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி தலைமையிலான ஆப்கன் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். ரஷித்கான் டெஸ்ட்டில் ஆடாத நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதும், முதல் போட்டியை இந்தியாவுக்கு எதிராக தான் ஆடியது. 2018ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த அந்த டெஸ்ட்டில் ரகானே தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் வென்றது. இன்று 2வது முறையாக நடக்கும் இந்த டெஸ்ட், இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நேற்று கூறுகையில், “பகல் நேர போட்டிக்கான ஐசிசியின் இளஞ்சிவப்பு பந்து சோதனையை நடத்துவது வரவேற்கத்தக்கது. சிவப்பு நிற பந்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெளிச்சம் குறைந்தால் போட்டியில் ஒரு முடிவு எட்ட வேண்டும் என்பதற்காக இந்த இளஞ்சிவப்பு பந்து மாற்றம் தேவை தான். காரணம், கடந்தாண்டு டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கு முந்தைய கடைசி டெஸ்டில் இந்தியா ஆடியபோது, முடிவுக்காக போராட வேண்டியிருந்தது. அதனால், இந்த பந்து மாற்றம் முடிவு நல்லது. மற்ற அணிகளும் இதனை ஆதரிக்க வேண்டும்,’’ என்றார்.
ரிஷப்பன்ட்க்கு ‘50’வது போட்டி;
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பன்ட், இன்று தனது 50வது டெஸ்ட்டில் களம் இறங்க உள்ளார். 28 வயதான அவர், இதுவரை 49 டெஸ்ட்டில் ஆடி 86 இன்னிங்சில் 8 சதம், 18 அரை சதத்துடன் 3,476 ரன் அடித்துள்ளார். அதிகபட்சம் 159*. சராசரி 42.91. டெஸ்ட்டில் 94 சிக்சர் அடித்து சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளார்.
