- இந்தியா
- ஆப்கானிஸ்தான்
- டெஸ்ட்
- சண்டிகர் மைதானம்
- சண்டிகர்
- மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
நியூசண்டிகர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஒரே ஒரு டெஸ்ட் நியூ சண்டிகர் மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் ஆடும் லெவனில் துவக்க வீரர்களாக துணை கேப்டன் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ஒன்டவுனாக சாய்சுதர்சன் களம் இறங்குவர். கேப்டன் கில் 3வது இடத்திலும், ரிஷப் பன்ட் 4வது இடத்திலும் ஆடலாம். ஆல்ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தருடன் அறிமுக வீரராக ஹர்ஷ் துபே இடம்பெறக்கூடும். சுழலில் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ், பிரசித்கிருஷ்ணா களம் இறங்குவர்.
ஒன்டே, டி.20 என ஒயிட்பால் கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள இந்தியா டெஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ளது. அண்மை காலமாக டெஸ்ட்டில் தடுமாறி வருகிறது. கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் தென்ஆப்ரிக்காவிடம் 2-0 என தோல்வி அடைந்தது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளது. இதில் ஜிம்பாப்வேக்கு எதிராக 2, அயர்லாந்துக்கு, வங்கதேசத்திற்கு எதிராக தலா 1 என 4ல் வென்றுள்ளது. 7ல் தோற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட்டில் டிரா செய்தது. வலுவான அணிகளை இதுவரை வீழ்த்தியது கிடையாது.
ஆனால் இந்த முறை இந்தியாவை வென்று வரலாறு படைக்க போராடும். ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி தலைமையிலான ஆப்கன் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ரஷித்கான் டெஸ்ட்டில் ஆடாத நிலையில் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
2வது முறையாக மோதல்…
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதும் முதல் போட்டியை இந்தியாவுக்கு எதிராக தான் ஆடியது. 2018ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த அந்த டெஸ்ட்டில் ரகானே தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்தியா 474 ரன்னுக்கு ஆல்அவுட் ஆக, ஆப்கன் முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி பாலோ ஆன் ஆனதுடன், 2வது இன்னிங்சில் 103 ரன்னுக்கு சுருண்டது. இரண்டே நாளில் அந்த போட்டி முடிந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்குஎதிராக டெஸ்ட்டில் ஆப்கன் களம் இறங்க உள்ளது.
ரிஷப் பன்ட் ‘50’
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பன்ட் நாளை தனது 50வது டெஸ்ட்டில் களம் இறங்க உள்ளார். 28 வயதான அவர் இதுவரை 49 டெஸ்ட்டில் ஆடி 86 இன்னிங்சில் 8 சதம், 18 அரைசதத்துடன் 3,476 ரன் அடித்துள்ளார். அதிகபட்சம் 159*. சராசரி 42.91. டெஸ்ட்டில் 94 சிக்சர் அடித்து சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளார்.
