பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தும் பணி

திருப்பூர், மார்ச் 6: திருப்பூரில், தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்தும் பணியை நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டமன்ற தேர்தல்-2021ல் தேர்தல் நடத்ததை விதி மீறல் தடுப்பு மற்றும் தேர்தல் செலவினம் குறித்து தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மேலும், குழுக்கள் தணிக்கையில் ஈடுபடுவது குறித்து கண்காணிப்பதற்கும், பறக்கும் படை, மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி அவர்களது நிலைகளை கண்டறிய, கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் செய்த நாள் முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியன அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய, வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணியினை நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் நடத்ததை விதி மீறல் குறித்த புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6989 மூலம் தெரிவிக்க இணைப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. எனவே, சட்டமன்ற பொது தேர்தல்-2021 தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்றனர்.

Related Stories:

>