திருவனந்தபுரம்: கேரளத்தில் 3 நாள் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கேரளம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும். கடந்த வருடம் மே இறுதி வாரத்திலேயே பருவமழை தொடங்கியது. இந்நிலையில் கேரளம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இது தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தான் என்றாலும் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
