மருந்து கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு

 

புதுச்சேரி, ஜூன் 2: புதுச்சேரி செல்லிப்பட்டு பெரியத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குரு (36). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் செயல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி குரு, குழந்தைகளின் பள்ளி கட்டணம் செலுத்துவதற்கான பணத்தை அவரது மனைவி நந்தினியிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நந்தினி பணத்தை பீரோவில் வைத்துள்ளார். ஆனால், பீரோவை பூட்டாமல் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி காட்டேரிக்குப்பத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி குரு வழக்கம்போல் வேலையை முடித்துக்கொண்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் அறையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த குரு அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்துபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 ஆயிரம் பணம், 8 சவரன் நகை மற்றும் 77 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து குரு திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

 

Related Stories: