புவனகிரி, மே 28: பரங்கிப்பேட்டை அருகே திருநங்கைகள் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் நடந்தது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் இங்கு வந்து, கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி மகிழ்வர். இந்தாண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணம் மற்றும் சாமி வீதியுலா, மாடுபிடி சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து இந்த விழாவில் பங்கேற்றனர். கோயிலுக்கு வந்த திருநங்கைகள் கூத்தாண்டவரை வணங்கி, கோயில் பூசாரி கைகளால் தாலி கட்டிக்கொண்டனர்.
கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, விடிய, விடிய ஆட்டம் ஆடி உற்சாகமாக விழாவில் பங்கேற்றனர். பல்வேறு பாடலுக்கு ஏற்ப நளினமான நடனங்களை ஆடி மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை தேரோட்டம் நடந்தது. அப்போது திருநங்கைகள் தேருக்கு முன் ஆட்டம் ஆடி, கும்மி அடித்தபடி சென்றனர். தேர் நிலைக்கு வந்ததும் மாலையில் அரவான் களப்பலி நடந்தது. அப்போது முதல் நாள் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் தங்களது தாலிகளை கோயில் பூசாரி மூலம் அறுத்து விதவை கோலம் பூண்டு நேர்த்திக் கடனை முடித்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா குறித்து கோயில் பூசாரி ராமதாஸ் கூறுகையில், கிருஷ்ண பகவானின் அம்சம்தான் திருநங்கை. மகாபாரத கதைப்படி இங்கு கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவில் பங்கேற்ற திருநங்கைகள் தாலி கட்டி கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவர், என்றார்.
