உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி புதுச்சேரி வாலிபர் பலி

 

உளுந்தூர்பேட்டை, ஜூன் 2: புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜக்கண்ணு மகன் ஜெயக்குமார்(42). இவரது மனைவி அமலோற்பவமேரி(29) மற்றும் குழந்தைகள் சுதர்சன்(7), ராஜேஷ்(5) ஆகியோர் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் நடைபெற்ற புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் தேரோட்டத்திற்கு பைக்கில் சென்றனர். விழா முடிந்த பின்னர் மீண்டும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெயக்குமார் அதே பைக்கில் எறையூர் கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டு இருந்தார். எ.குமாரமங்கலம் காளியம்மன் கோயில் அருகில் சென்ற போது அங்கு சாலையில் நின்று கொண்டு இருந்த தனியார் பள்ளி வாகனத்தை ஜெயக்குமார் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவி, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Related Stories: