லெபனானின் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்.!!

பெய்ரூட்: லெபனான் நாட்டிற்குள் இஸ்ரேலிய படையினர் தொடர்ந்து தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி,ஊடுருவி செல்வதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. மேலும் தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பியூஃபோர்ட் என்ற கோட்டையை இஸ்ரேலிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது தாக்குதலில் இது ஒரு முக்கிய திருப்புமுனை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருக்கிறார். சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த சிலுவைப்போர் காலக் கோட்டையை இஸ்ரேலிய ராணுவத்தினர் கைப்பற்றி, அதன் மீது இஸ்ரேலிய கொடியை ஏற்றினர்.

கடந்த 26 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லைக்குள் இவ்வளவு ஆழமாக ஊடுருவியிருப்பது இதுவே முதல்முறையாகும். பியூஃபோர்ட் கோட்டையைக் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், இஸ்ரேல் ராணுவம் லிதானி ஆற்றைக் கடந்து சாஹ்ரானி ஆறு வரை தனது போர் மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பேசுகையில், வடக்கு இஸ்ரேலியப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தங்களது ராணுவம் தொடர்ந்து முகாமிட்டிருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதனிடையே தெற்கு லெபனான் கிராமங்களில் இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் எல்லாவற்றையும் அழிக்கும் போக்கை கையாளுவதாக லெபனான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: