சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சாத்தான்குளம், மார்ச் 4: சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யகோரி கொலையானவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கீழஅம்பலசேரியைச்  சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன் (45). இவருக்கும் அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி மகன் ராமர்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அம்பலசேரி வடபுறத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு கட்டாரிமங்கலம் ஊரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர், குடிநீர் இணைப்பு கொடுக்கும் இடத்தில் கணேசன் வந்து என்னுடைய வீட்டிற்கு சரியாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளார். அப்போது  அங்கு வந்த ராமர், கணேசனை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டு விலகி விட்டுள்ளனர்.

பின்னர் கணேசன் அம்பலசேரி ஆர்.சி பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமர் உள்பட 2பேர் அரிவாளுடன் வந்து கணேசனை மிரட்டினர். உடன் சுதாரித்த கணேசன் ஆர்சி சர்ச் காம்பவுண்டுக்குள் ஓடினார். விரட்டி சென்ற ராமர் உள்ளிட்ட இருவரும் அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

 தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மேற்பார்வையில் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஸ்குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், தட்டார்மடம்  இன்ஸ்பெக்டர் சாம்சன்ஜெபதாஸ், தூத்துக்குடி மத்திய குற்ற பிரிவு எஸ்.ஐ, ராஜபிரபு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.  இதற்கிடையே கணேசனை வெட்டி கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யகோரியும், குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உடலை வாங்க மறுத்து அம்பலசேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் டிஎஸ்பிகள், வெங்கடேசன், காட்வின் ஜெகதீஸ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பெர்னார்டு சேவியர், சாம்சன் ஜெபதாஸ், விஜயலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொலையான கணேசன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  

 இதற்கிடையே தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி மகன் ராமர் (25) என்பவரை  கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   கொலை வழக்கில் குற்றவாளியை 12 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Related Stories: