உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கழுத்தை அறுத்து கொன்று வீட்டின் தோட்டத்தில் புதைத்த கொடூரம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி பகுதியில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்து கொன்று வீட்டின் தோட்டத்தில் புதைத்துள்ளார். கள்ளக்காதலனுடன் தப்பியோடிய பெண்ணை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி அருகே பூவரசன்குப்பத்தை சேர்ந்தவர் சகாயம். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் லியோபால் (31), பச்சை குத்தும் வேலை செய்து வந்தார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுஜிதாமேரி (25) என்ற பெண்ணுடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.  லியோ பால், சுஜிதாமேரி குழந்தைகளுடன் பூவரசன்குப்பம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராதாகிருஷ்ணன் (20) திண்டிவனம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். லியோபால் மற்றும் ராஜேந்திரன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

 லியோபால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி இரவு 7 மணி அளவில் உறவினர் திருமணத்திற்கு சென்றதாகவும் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை என சுஜிதாமேரி தனது மாமனார் சகாயத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் லியோபாலை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சகாயம் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக பிப்ரவரி 21ம் தேதி சுஜிதாமேரியிடம் கூறியுள்ளார். இதன் பின்பு சுஜிதாமேரி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பிப்ரவரி 21ம் தேதி அன்று இரவே மாயமாகினர்.  மறுநாள் காலை லியோபால் வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் சுஜிதாமேரியை தேடிப் பார்த்துள்ளனர். அவர் இல்லாததையடுத்து, சகாயத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். அதன் பின்பு சகாயம் இதுகுறித்து, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

 சுஜிதாமேரி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் காணவில்லை என்பதால் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் ராதாகிருஷ்ணன் உடன் படிக்கும் அவரது நண்பன் கோபி என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து, போலீசார் தரப்பில் கூறியதாவது, நண்பனான லியோபால் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த ராதாகிருஷ்ணனுக்கும், சுஜிதாமேரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஓராண்டாக கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விவகாரம் சுஜிதாமேரி கணவர் லியோபாலுக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

 

 ஆனால் சுஜிதாமேரி, ராதாகிருஷ்ணன் அவர்களின் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் அவ்வப்போது சுஜிதாமேரி மற்றும் லியோபால் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுஜிதாமேரி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து உல்லாசத்துக்கு தடையாக இருக்கும் லியோபாலை கொலை செய்ய திட்டம் தீட்டி தக்க சமயம் வரும்வரை காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி இரவு வீட்டில் மதுபோதையில் இருந்த லியோபாலை இருவரும் சேர்ந்து இரும்பு ராடால் அடித்து கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அன்று இரவே யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். மறுநாளே கணவனை காணவில்லை என்று சுஜிதாமேரி நாடகம் ஆடியதும், லியோபாலை காணவில்லை என போலீசாரிடம் சகாயம் புகார் கொடுக்க போவதாக கூறியதை அடுத்து இருவரும் 21ம் தேதி இரவு தப்பித்து சென்றதும் தெரியவந்தது.  

 இதனையடுத்து போலீசார் விக்கிரவாண்டி பூவரசன்குப்பத்தில் உள்ள லியோபால் வீட்டிற்கு சென்று வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தனர். அதன் பின்பு நேற்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் உட்கோட்டம் டி.எஸ்.பி நல்லசிவம், தாசில்தார் தமிழ்ச்செல்வி, தடயவியல் துறையினர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சண்முகம், வருவாய் துறையினர், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   

 இதுகுறித்து, விழுப்புரம் உட்கோட்ட டி.எஸ்.பி நல்லசிவம் கூறுகையில், இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மார்பு எலும்பு உடைந்துள்ளது. கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

 மேலும் இறந்த நபருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியவரும். குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர் என்றார்.

Related Stories:

>