நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை; சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் சுருளி அருவி: குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கம்பம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் சொட்டு தண்ணீர் இல்லாமல் சுருளி அருவி வறண்டு கிடக்கிறது. இதையறியாமல் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சுருளி அருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் இந்த அருவி திகழ்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை மற்றும் மேகமலை தூவானம் பகுதியில் மழை பெய்யும் காலங்களில் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். விடுமுறை காலங்களில் தேனி, மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து குளித்து மகிழ்வர்.

மேலும், இறந்த முன்னோருக்கு அமாவாசை நாட்களில் அருவிப் பகுதியில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவர். இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருகை தினசரி இருக்கும். இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து சுத்தமாக இல்லை. அருவிப் பகுதி பாறையாக காட்சியளிக்கிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளை நாடி வருகின்றனர். இதன்படி சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆனால், அருவியில் நீர்வரத்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related Stories: