பக்ரீத் பண்டிகை, கோயில் திருவிழாக்களை முன்னிட்டு திருப்புவனத்தில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்வர். திருப்புவனம் ஆட்டுச்சந்தை தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. திருவிழாக் காலங்களில் விற்பனை களைகட்டும். இங்கு வழக்கமாக ஆடுகள் கிலோ ரூ.800லிருந்து 900 வரை விற்பனையாகும்.

இந்த நிலையில் நாளை மறுதினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும், சுற்றுப்புற கிராமக் கோயில்களில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. இதனால், இன்று திருப்புவனத்தில் கூடிய சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் அதிகாலையிலேயே குவிந்தனர். வெள்ளாடு மற்றும் செம்மறியாடு கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. சந்தைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகை, சுற்றுப்புற கிராமங்களில் கோயில் திருவிழாவால் ஆடு விற்பனை இன்று களைகட்டியது. விலை உயர்ந்த போதிலும் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின’ என்றனர்.

Related Stories: