×

ஐபிஎல் முதல் குவாலிபையரில் வலுவான அணியாக ஆர்சிபி; சவாலுக்கு தயாராக குஜராத்: தர்மசாலாவில் இன்று மல்லுக்கட்டு

 

 

தர்மசாலா: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டியில் இன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தன. 10 அணிகள் இடையே நடந்த 70 லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகள் ஆடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அதேபோல், குஜராத் டைடன்ஸ் அணி, 14 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்றபோதும், நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ம் இடம் பிடித்தது.

தவிர, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும் பிடித்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், தர்மசாலா நகரில் இன்று நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியை தழுவும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், குவாலிபையர் 2 போட்டியில் மோதும். நடப்பு தொடரில், பெங்களூரு, குஜராத் அணிகள் துவக்கம் முதல் மிக சிறப்பாக ஆடி மெச்சத்தக்க வகையில் வெற்றிகளை குவித்து முன்னேறின.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை, அட்டகாசமாக அமைந்ததால், வெற்றிகள் எளிதில் வசப்பட்டன. முந்தைய ஐபிஎல் தொடர்களை ஒப்பிடுகையில், தற்போதைய பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் சொல்லி அடிக்கும் கில்லியாக திகழ்ந்து விக்கெட்டுகளை எடுக்கின்றனர். நடப்பு சாம்பியனாக திகழும் பெங்களூரு அணி, 8 முறை 200க்கும் அதிக ரன்களை குவித்த அணியாக உள்ளது. தர்மசாலாவில் இதற்கு முன் நடந்த போட்டியில் பங்கேற்றதால், ஆடுகளத்தில் தன்மையை அறிந்திருப்பது சாதக அம்சம். பெங்களூரு அணியின் விராட் கோஹ்லி, டிம் டேவிட், பில் சால்ட், தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் அசத்தி வருகின்றனர்.

குஜராத் அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் நேர்த்தியும், துல்லியமும் காணப்படுவதால் எதிரணி பேட்டர்கள் திணறுவது வாடிக்கை. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ், காகிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ஒவ்வொரு போட்டியிலும் திறம்பட பந்து வீசி தங்கள் வல்லமையை நிரூபித்து வருகின்றனர். அதேபோல், அந்த அணியின் ரஷித் கான், இடதுகை சுழல் வீச்சாளர் சாய் கிஷோர், மிடில் ஓவர்களில் மாயாஜாலம் காட்டி அசத்தி வருகின்றனர். குஜராத் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி வருகின்றனர். இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்பதால் இன்றைய போட்டியில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

Tags : RCB ,IPL ,Gujarat ,Dharamsala ,Royal Challengers ,Bangalore ,Gujarat Titans ,IPL league ,
× RELATED கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி