×

சில்லி பாயிண்ட்

 

* ஜேகப் பெத்தேல் காயத்தால் விலகல்

அகமதாபாத்: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதல் மற்றும் 2ம் இடங்களை பிடித்துள்ளன. இதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்த அணிகள், வரும் 26ம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக பெங்களூரு அணி தீவிரமாக ஆயத்தமாகி வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜேகப் பெத்தேல் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். பஞ்சாப் அணியுடனான போட்டியில் பீல்டிங்கின்போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது.

* ஐபிஎல்லில் 7000 ரன்: ஷ்ரேயாஸ் சாதனை

லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 101 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் படைத்துள்ளார். இதற்கு முன், வீரேந்திர ஷேவாக், விராட் கோஹ்லி, சஞ்சு சாம்சன், ஐபிஎல் அணிகளின் கேப்டனாக செயல்பட்டு சதம் விளாசியுள்ளனர். தவிர, லக்னோ அணிக்கு எதிராக அடித்த சதத்துடன் சேர்த்து ஷ்ரேயாஸ், டி20 போட்டிகளில் விளாசிய ரன் எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது.

* 2ம் முறை 500 ரன்: பிரப்சிம்ரன் அசத்தல்

லக்னோ: தேசிய அணியில் இடம்பெறாத, அன்கேப்டு வீரரான பிரப்சிம்ரன் சிங்கை, பஞ்சாப் அணி ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன், 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதனுடன் சேர்த்து, நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் விளாசிய ரன்கள் எண்ணிக்கை 500ஐ கடந்தது. இதற்கு முன், கடந்த 2025ல் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் அவர் 549 ரன்கள் குவித்தார். இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை 500க்கும் கூடுதலான ரன்கள் குவித்த அன்கேப்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Tags : Chilli Point ,Jacob Bethel ,Ahmedabad ,Royal Challengers ,Bangalore ,Gujarat Titans ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...