ராஞ்சி: பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி, 44.98 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சி நகரில் பெடரேஷன் கோப்பை தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற குரிந்தர்விர் சிங் 10.09 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்திய ஓட்டப்பந்தய வரலாற்றில் இதுவரை யாரும் எட்ட முடியாத புதிய தேசிய சாதனையாக அவரது ஓட்டம் அமைந்துள்ளது.
அதற்கு பின் நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி 44.98 நொடிகளில் அந்த தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். இதுவரை, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 45 நொடிகளுக்கு உள்ளாக எந்தவொரு இந்தியரும் போட்டி தூரத்தை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை தொடர்ந்து நடந்த டெகாத்லான் போட்டியில் தேஜஸ்வின் சங்கர், 8057 புள்ளிகள் பெற்று புதிய தேசிய சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் 8000 புள்ளிகளை கடந்த முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தேஜஸ்வின் சங்கர் படைத்துள்ளார். பெடரேஷன் கோப்பை தடகள போட்டிகளில் தற்போது படைக்கப்பட்ட மூன்று சாதனைகளும் சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது இந்திய தடகள துறைக்கு புத்துணர்வை அளித்துள்ளது.
