37 வருடமாக சென்று வந்த அரசு பஸ் 3 மாதமாக நிறுத்தம் 10 கிராமமக்கள் கடும் அவதி

சாயல்குடி, மார்ச் 4:  கீழக்கரையிலிருந்து சிக்கல், வல்லக்குளம் வழித்தடத்தில் தேரிருவேலிக்கு 37 வருடமாக இயக்கப்பட்ட டவுன் பஸ்ஸை 3 மாதமாக நிறுத்தியதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் விடவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக 10 கிராமமக்கள் அறிவித்துள்ளனர். சாயல்குடி அருகே சிக்கல் கிராமம் வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி ராஜாக்கள் பாளையம், சொக்கானை, வல்லக்குளம், பேய்க்குளம், பனிவாசல், ஆதங்கொத்தங்குடி, பூசேரி, தேரிருவேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ச்சியாக உள்ளன.

மேலும் அன்னியுண்ணி, மறவாய்குடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. இப்பகுதி கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி, அரசு சான்றுகள், உதவிகளை பெறுவதற்கு சிக்கல், தேரிருவேலி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடிக்கு வந்து செல்ல வேண்டும். விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும், இப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் சிலர் அருகிலுள்ள வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1984ல் ராமநாதபுரம் அரசு பஸ் டிப்போ சார்பில் கீழக்கரையிலிருந்து ராஜாக்கள்பாளையம், சிக்கல், வல்லக்குளம் வழித்தடத்தில் டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பேருந்தை இப்பகுதி கிராமமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் லோடு வண்டிகள், ஷேர் ஆட்டோக்களில் ஆபத்து பயணம் மேற்கொண்டு வருவதாக புகார் கூறுகின்றனர். மேலும் ஆட்டோக்களில் சென்று வருவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர். இது குறித்து ராமநாதபுரம் பஸ் டிப்போ மேனேஜரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து 10 கிராமமக்கள் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் உள்ளோம். எனவே நிறுத்தப்பட்ட பஸ்ஸை மீண்டும் இயக்குவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: