மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் 186 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 196 பேர் ஏறி அமர்ந்திருந்தனர். சென்னை விமான நிலையத்தில் இந்த விமானம் நள்ளிரவு 11.45 மணியளவில் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானது. அப்போது அந்த விமானத்தில் இருந்த மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (35), பிரசாந்த் (36) ஆகிய 2 பயணிகளும் மதுபோதையில் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதில், ஒருவருக்கு ஒருவர் அடிதடியில் ஈடுபட்டு சரமாரி தாக்கிக் கொண்டு, விமானத்துக்குள் கடும் கூச்சல், குழப்பம் செய்தனர். இது, சக பயணிகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பயணிகளையும் விமானப் பணிப்பெண்கள் அமைதிப்படுத்த முயன்றனர்.
எனினும், அவர்கள் தங்களுக்குள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து சரமாரி தாக்கிக் கொண்டனர். இதுபற்றி விமானியிடம் விமானப் பணிப்பெண்கள் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி புகார் தெரிவித்து, விமானத்துக்குள் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பும்படி வலியுறுத்தினார். இதையடுத்து, கோலாலம்பூருக்கு புறப்படத் தயாரான விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே ஏறினர். அங்கு அடிதடி தகராறில் ஈடுபட்ட 2 பயணிகளை வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
அதோடு, விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட 2 பயணிகளின் மலேசிய பயணமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த 2 பயணிகளின் அனைத்து உடைமைகளும் கீழே இறக்கப்பட்டன. பின்னர், அந்த ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 1.10 மணியளவில் 184 பயணிகளுடன் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட மலேசிய குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இந்தியர்களான நந்தகுமார், பிரசாந்த் ஆகிய 2 பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு சென்று, அங்கே நிரந்தரமாக தங்கி, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் அவர்களது உறவினர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியாவில் இருந்து இருவரும் வந்துள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பும்போது இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது எனத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.
