புதுடெல்லி: ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தா, மனுக்கள் பரிசீலனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி ராகவ் சத்தா, ராஜ்யசபாவின் மனுக்கள் பரிசீலனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜ்யசபா செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 20ம் தேதி முதல் இந்த குழு மறுசீரமைக்கப்பட்டு, ராகவ் சத்தா அதன் தலைவராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் முன்வைக்கும் பொது நலன் சார்ந்த புகார்கள், கொள்கை அமலாக்கம் மற்றும் ஒன்றிய அரசின் வரம்பிற்குள் வரும் நிர்வாக ரீதியான குறைபாடுகளை இந்த குழு ஆய்வு செய்து மேல் சபைக்கு பரிந்துரைகளை வழங்கும். குடியரசு துணை தலைவரான ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த மறுசீரமைப்பில், ஹர்ஷ் மகாஜன், குலாம் அலி, சம்பு சரண் படேல், மயன்குமார் நாயக், மஸ்தான் ராவ் யாதவ் பீதா, ஜெபி மத்தர் ஹிஷாம், சுபாஷிஷ் குந்தியா, ருங்வரா நர்சரி மற்றும் சந்தோஷ் குமார் என மொத்தம் 10 உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், ராகவ் சத்தா மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மற்ற 6 எம்பிக்கள் பாஜகவில் இணைந்தனர். இந்த கட்சி தாவல் நடவடிக்கை, மேல் சபையின் தற்போதைய அரசியல் சூழலை மாற்றி அமைத்துள்ளதோடு, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. எதிர்க்கட்சி குரலாக அறியப்பட்ட ராகவ் சத்தா, தற்போது ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற கட்டமைப்பில் முக்கிய பொறுப்பிற்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
