மணலி புதுநகர் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை

 

* மீஞ்சூரில் பதுங்கியிருந்த வாலிபர் சுற்றிவளைப்பு
* மூவர் கொலைக்கு பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவர் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததாக தெரிவித்த போலீசார், கொலை செய்த வாலிபரை கைது செய்தனர். மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் மணலி புதுநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை விஜயகுமார், விச்சூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நடந்து வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயகுமாரின் மார்பில் குத்தினார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயகுமாரை, அந்த வாலிபர் அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட வாலிபர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார்.

காலை நேரம் என்பதால் அந்த வழியாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் சம்பவம் நடைபெற்றபோது யாரும் பார்க்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வந்தவர்கள் சாலை ஓரத்தில் ரத்த வெள்ள பிணமாகி கிடந்த விஜயகுமாரை பார்த்து, மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விஜயகுமார் மற்றும் அவரது அண்ணன் அஜித்குமார் (எ) கருப்பு அஜித்குமார் (28) இவரும் பிரபல ரவுடிகள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விச்சூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள உடற்பயிற்சி மையத்தில், கஞ்சா வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார், விஜயகுமார் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளிகள்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது கண்ணம்பாளையத்தில் கொலையான 3 பேரின் நண்பர்கள் பழிக்குப் பழியாக அஜித்குமார் மற்றும் அவரது தம்பி விஜயகுமாரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து சக ரவுடிகள் மூலம் தெரிந்து கொண்ட அஜித்குமார், விஜயகுமார் இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

மேலும் ஊருக்குள் வந்தால் கொலை விழும் என்பதால் இவர்களின் உறவினர்களும் ஊருக்குள் வர வேண்டாம் என இருவரையும் எச்சரித்துள்ளனர். இதனால் திருமணமாகாத அஜித்குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து இடம் மாறி மாறி தங்கி தலைமறைவாகவே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் விச்சூரில் அடுத்த சில நாட்களில் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இவரது மூத்த அண்ணன் ஜெய் என்பவரின் மகளுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிறந்தநாள். இதனால் திருவிழாவிற்கு முன்பு, தான் பிறந்து வளர்ந்த ஊரான விச்சூர் பகுதியை ஒருமுறை பார்த்துவிட்டு, தன்னுடைய மூத்த அண்ணன் மகளையும் வாழ்த்தி விட்டு வரலாம் என விஜயகுமார் நேற்று வந்துள்ளார். பின்னர் அனைவரையும் பார்த்துவிட்டு பைக்கில் புறப்பட்டுள்ளார்.

இதனிடையே ஏற்கனவே கண்ணம்பாளையத்தில் கொலையுண்டு உயிரிழந்தவர்களின் நண்பர் வாலிபர் ஒருவர் விச்சூரில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்துள்ளார். அப்போது விஜயகுமார், மூத்த அண்ணன் ஜெய் வீட்டிற்கு வந்திருப்பது அந்த வாலிபருக்கு தெரிந்துள்ளது. உடனே இதுதான் பழி தீர்ப்பதற்கு சரியான சமயம் என்று எண்ணி அந்த வாலிபர் உடனடியாக கூர்மையான அரிவாளை எடுத்துக் கொண்டு விஜயகுமாரின் வீட்டுக்கு அருகாமையில் விச்சூர் சாலையில் எதிர் புறமாக காத்திருந்துள்ளார். சற்று நேரத்தில் விஜயகுமார் பைக்கில் திரும்பி வரும்போது, காத்திருந்த அந்த வாலிபர் எதிர்புறமாக சாதாரணமாக வருவது போல் நடந்து வந்து திடீரென்று அரிவாளை எடுத்து அஜித்குமாரை சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபர் யார், அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்து விசாரணை செய்த போலீசார், விச்சூர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது விச்சூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (எ) லோகேஷ்வரன்(28) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மணலி காவல் ஆணையர் விவேகானந்தன் தலைமையில், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை போலீசார் மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த லேகேஷ்வரனை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப் பகலில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 12 மணி நேரத்தில் 2 கொலைகள்

மணலி புதுநகரைச் சேர்ந்த பிரசாந்த் என்ற பிரபல ரவுடி, நேற்று முன்தினம் இரவு பழைய நாபாளையம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு, அவரது அண்ணன் நவீன் படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடி பகுதியில் பதுங்கியிருந்த கொண்டைக்கரை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (28), எழிலரசன் (26) ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சாவு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு கொலை நடந்து அடுத்த 12 மணி நேரத்தில் மற்றொரு கொலையும் அதே பகுதியில் நடைபெற்றது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Related Stories: