சென்னை: கோவையில் சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழி எம்பி (திமுக துணை பொதுச்செயலாளர்): கோவை – சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்லப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): கோயம்புத்தூர் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த வேதனையிலும் உறைந்து போயுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்த மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். குற்றவாளிகளுக்கு காலதாமதமின்றி அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அன்புமணி (பாமக): புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.
பிரேமலதா (தேமுதிக): இந்த கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க வேண்டும். யாருக்கோ வருவதில்லை; யாருக்கும் வருவது என்பதை கருதில் கொண்டு உட்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): சூலூர் அடுத்த பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான சட்டப்பூர்வ தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குறுகிய காலத்திலேயே தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
டிடிவி.தினகரன் (அமமுக): கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களை கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும்.
ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்): சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த கொடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): குழந்தைகளை இப்படி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ததோடு நிறுத்தாமல், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சிறப்பு நீதிமன்றம் மூலம் மரண தண்டனை விதிக்க வேண்டும்.
முகமது முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உரிய உறுதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் தன் பாதுகாப்பு குறித்தும், பாலின சமத்துவம் குறித்த உரையாடலை தொடங்கி அவற்றைப் பாடத்திட்டங்களாக உருவாக்கி கற்பிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கோவை, சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முகம், கண் சிதைக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த மிருகத்தனமான குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டணை பெற்றுத் தர வேண்டும். சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
சீமான் (நாதக ஒருங்கிணைப்பாளர்): கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. எவ்வித கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்..
