எடின்பரோ: ஹோர்முஸ் நீரிணை பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலர் வரை உயரும் என Wood Mackenzie என்ற சர்வதேச நிறுவனம் எச்சரித்து உள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தை எவ்வாறு இயங்குகிறது, எதிர்காலத்தில் அதன் விலைகள் மற்றும் தேவைகள் எப்படி இருக்கும் என்பதைப் பெரிய நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் துல்லியமாகக் கணித்துக் கூறுவதே இந்த உட் மெக்கன்சி நிறுவனத்தின் வேலை ஆகும்.
இந்த நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையானது, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயரும் என்று கூறி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாய் மதிப்பில் பீப்பாய்க்கு ரூ.19,000 வரை அதாவது 200 அமெரிக்க டாலர் வரை அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை 2026 இறுதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு மேற்கண்ட விலை வரை உயர கூடும் என்று Wood Mackenzie நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.தற்போதைய நிலவரப்படி, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சர்வதேச கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் 20% இந்த நீரிணை வழியாகவே நடக்கிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $104.25 வரையிலும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $96.60 வரையிலும் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
