×

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: 2 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை, மே 20: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம்பறிக்கும் இடைத்தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கூட்டுறவு துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது பின்பற்றப்படும் டோக்கன் நடைமுறையை நீக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களை அணுகும் விவசாயிகளிடம் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாகவே பதிவுசெய்து டோக்கன் பெறும் வகையிலான நடைமுறையை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக பணம் கேட்டு இடைத்தரகர்களால் விவசாயிகள் துன்புறுத்தப்படுவது குறித்து 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு காவல்துறை தரப்பில் இதுதொடர்பாக, தங்களுக்கு எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் புதிய கோரிக்கை மனுவை அனுப்ப வேண்டும். மனுதாரரின் வாதத்தில் உள்ள தீவிரத்தை கருத்தில் கொண்டு அவரது மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை கூட்டுறவு துறை செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Court ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Cooperatives Department ,Anti-Corruption Department ,
× RELATED பல்லாவரம் ஏரியில் மருத்துவ கழிவுகள்...