மானூர், மே 23: மானூர் அருகே நேற்று அதிகாலை பைக் மீது அரசு பஸ் மோதியதில் விவசாய தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மானூர் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (65). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி லீலா (63). இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணமாகி அதே ஊரில் வசித்து வருகின்றனர். இவர் தினமும் அதிகாலை 5 மணியளவில் தனது பைக்கில் ரஸ்தா கிராமத்திற்கு சென்று டீ குடித்து சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலை தனது பைக்கில் ரஸ்தா கிராமத்தில் டீ குடித்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
காலை 6.30 மணியளவில் கரம்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சங்கரன்கோவில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, வலது புறமாக பைக்கில் சென்ற சுப்பிரமணியன் மீது மோதி அருகேயுள்ள பள்ளத்தில் புகுந்தது. இந்த விபத்தில் பேருந்து முன்பகுதியில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மானூர் போலீசார் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து மானூர் போலீசார் பேருந்தை ஓட்டி வந்த சங்கரன்கோவில் கீழநீலிதநல்லூரை சேர்ந்த ராஜ் (41) என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
