திருத்துறைப்பூண்டி, மே 23: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முள்ளியாறு பாசனத்தை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் முள்ளியாற்றில் வெங்காயதாமரை செடிகள் அதிக அளவு மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பல்வேறு பாசன வாய்க்கால்களுக்கும், வயல்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
வெங்காய தாமரை செடிகளால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வடிய வைக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. வெங்காயதாமரை செடிகள் அழுகி இருப்பதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதோடு ஆற்றின் அருகே வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. உடனடியாக முள்ளியாற்றில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்றி தூர் வாரி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
