இடப்பிரச்னை விவகாரத்தில் சிவகிரி காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை முயற்சி: இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம் குடித்ததாக மனைவி குற்றச்சாட்டு

 

சிவகிரி: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜூ (63). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக அருகில் வசிக்கும் பேச்சிபாண்டி மனைவி பசுபதி (37), சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இருதரப்பினரையும் அழைத்து, சர்வேயர் மூலம் அளந்து கட்டுமானப் பணியை மேற்கொள்ளும்படி இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறியுள்ளார்.

ஆனால், கட்டுமான பணியை அந்தோணிராஜூ தொடர்ந்ததால், நேற்று முன்தினம் அவரை மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். மாலை 6.30 மணியளவில் அங்கு சென்ற அந்தோணி ராஜூவை இன்ஸ்பெக்டர் முரளிதரன் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜூ பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். ேபாலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்தோணிராஜூ மனைவி செல்லம்மாள் மற்றும் குடும்பத்தினர், இன்ஸ்பெக்டர் தாக்கியதால் தான் அவர் விஷம் குடித்தாக கூறி காவல்நிலைய வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி மதன் மற்றும் போலீசார் வந்து சமரசம் செய்து அனுப்பினர்.
இதற்கிடையே தென்காசி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அந்தோணிராஜூ வெளியிலே பூச்சிகொல்லி மருந்தை குடித்துவிட்டு காவல் நிலையம் வந்து உள்ளார். இதுதெரிந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: