×

‘நடப்பது எங்க ஆட்சி, மாதம் ரூ.1 லட்சம் கொடுங்க’வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்

 

* தட்டி கேட்டவர்களுக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை
* வீடியோ வைரல்: போலீசில் உரிமையாளர்கள் புகார் மனு

வேலூர்: வேலூர் கணியம்பாடியில் செயல்படும் செங்கல்சூளைகளில் மாதம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகள், தட்டி கேட்டவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்த நாள் முதல் மாநிலம் முழுவதும் அந்த கட்சியின் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதி செங்கல்சூளைகளில் தவெக நிர்வாகிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணியம்பாடி வட்டாரத்தில் கணியம்பாடி, கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் என பல இடங்களில் 25க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. வேலூர் மாவட்ட கட்டுமான பணிகளின் 40 சதவீத செங்கல் தேவையை கணியம்பாடி பகுதி செங்கல் சூளைகள் பூர்த்தி செய்கின்றன. இந்த செங்கல்சூளைகளை நம்பி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் கணியம்பாடி ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உட்பட பலர் கார், பைக்குகளில் கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் அத்துமீறி நுழைந்தனர். தொடர்ந்து செங்கல்சூளை உரிமையாளர்களிடம், ‘நடப்பது எங்க ஆட்சி. எங்களுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடுத்தால்தான் சூளையே நடக்கும். இல்லையென்றால் சூளைகளை இழுத்து மூடுவோம்’ என்று மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டார்களாம்.

இதையடுத்து செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரண்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தவெகவினர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் செங்கல்சூளை உரிமையாளர்கள், 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

இதற்கிடையில் செங்கல்சூளைகளில் தவெக நிர்வாகிகள் அத்துமீறி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த வீடியோ பதிவுகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செங்கல்சூளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘இப்பவே இவர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை. இவர்களுக்கு ஓட்டு போட்டதற்கு இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோ தெரியலேயே.

இதுபோன்று எங்களை மாமூல் கேட்டு யாரும் மிரட்டியதில்லை?’ என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘செங்கல்சூளைகள் தரப்பில் புகார் மனு அளித்துள்ளனர். யாரையும் பிடித்து வந்து எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Thaveka ,Vellore ,Kaniyambadi, ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!