×

தவெக அமைச்சரவையில் விசிக, முஸ்லிம் லீக் திமுக எம்.பி. ஆ.ராசா கடும் விமர்சனம்

 

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக, முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ள நிலையில் அதை விமர்சித்து திமுக எம்.பி. ஆ.ராசா எக்ஸ் தளத்தில் கடுமையான பதிவுகளை வெளியிட்டார். விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் சேர்ந்தது. வன்னியரசு, ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.

இந்நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் இதை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’மூட சாதியை நொறுக்க வேண்டிய‘சிறுத்தையும்’வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேசவர்த்தமான’த்திற்குகாத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்!வெற்றி நமக்கே – என கூறியிருந்தார்.

இந்த பதிவு பலத்த சர்ச்சைக்குள்ளான நிலையில், அப் பதிவை ஆ.ராசா நீக்கினார். தொடர்ந்து மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில், ‘‘என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் முடத்தெங்கு. அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்’’ என கூறியுள்ளார்.

ஆ.ராசாவின் இந்த பதிவுகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து பதில் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களை பேச வேண்டாம்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : DMK ,A. Raja harshly ,VKC ,Muslim League ,Thaweka ,Chennai ,Vijay ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!