×

கொள்முதல் செய்யாததால் 10 நாட்களாக டிராக்டரில் நெல் மூட்டைகள் தேக்கம்: வீணாகி வருவதாக விவசாயிகள் குமுறல்

 

சென்னை: நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் 10 நாளாக டிராக்டரில் நெல் மூட்டைகளை தேக்கி வைத்துள்ளனர். இதனால், நெல் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில், தாமரைப்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு புன்னப்பாக்கம், மாகரல், அமணம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒரு பருவத்திற்கு சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வார்கள்.

இந்நிலையில், தாமரைப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை எடுத்துச்சென்றனர். ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தாமரைப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 10 நாளுக்கு முன்பு சுமார் 20 டிராக்டர்களில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை எடுத்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூட்டைகளை வாங்கவில்லை. இதனால், நெல் மூட்டைகள் கடந்த 10 நாளாக டிராக்டரிலேயே கொள்முதல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிகாரிகளிடம் ஏன் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அதிகாரிகள், புதிய ஆட்சி வந்துள்ளதால் நெல் எடுக்க அனுமதி வரவில்லை. கோணி இல்லை, ஒன்றிய அரசு தான் நெல் கொள்முதல் செய்யும் என்றனர். இதனால், விவசாயிகள் டிராக்டரில் நெல்லை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தாமரைப்பாக்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு நாங்கள் அறுவடை செய்த நெல்லை டிராக்டரில் கொண்டு வந்தோம். ஆனால், ஏற்கனவே கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நெல் உள்ளது.

அதை எடுத்துச்செல்ல வண்டி வந்தால் தான் உங்கள் நெல்லை வாங்க முடியும். மேலும், கோணி பைகள் இல்லை, சணல் கயிறுகள் இல்லை, அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை ஆகையால் உங்கள் நெல்லை வாங்க முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால், நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை டிராக்டரிலேயே 10 நாளாக வைத்துள்ளோம். வாடகை டிராக்டர் எடுத்து வந்ததால் அதற்கு ஒரு நாளைக்கு ரூ.1000 வாடகை கட்டுகிறோம். மேலும், சில நேரங்களில் திடீரென மழை பெய்து எங்களின் நெல் மூட்டைகள் நனைந்து அந்த நெல் மூட்டைகளில் நாற்று வருகிறது. எனவே, எங்கள் நெல் மூட்டைகளை விரைவில் வாங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

மூட்டைக்கு 40 ரூவா…
நெல் மூட்டைகளை அரசாங்கம் கொள்முதல் செய்யும்போது எடை போடும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்ததும், அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு செய்து, அப்படி நடைபெறவில்லை என்று மறுத்தார். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் ஈசூரில் ஒரு மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதுமே வசூலிக்கப்படுவதாகவும், இந்த பணம் அதிகாரிகள் மூலம் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் செல்வதாக கீழ்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் வாங்க மாட்டார்கள் என்று சொன்ன பிறகும் வசூலிப்பது ஏன், அரசே மறைமுகமாக ஆதரிக்கிறதா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Chennai ,Periyapaliam ,Ellapuraam Union ,Lamarippakkam ,
× RELATED 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!