×

சேலம் அருகே தனியார் பள்ளியில் முறைகேடு; பிளஸ் 2 வினாத்தாள் கசிந்ததில் அதிகாரிகளுக்கு தொடர்பு?.. தலைமை ஆசிரியர்கள் புகாரால் பரபரப்பு

 

சேலம்: சேலம் அருகே தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் அடுத்த வாழப்பாடி தனியார் பள்ளியில், கடந்த மார்ச் 17ம் தேதி நடந்த பிளஸ் 2 கணித தேர்வின் போது, முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த பள்ளியின் முதல்வர் ஸ்டான்லி ஜான் பீட்டர், ஆசிரியர்கள் தினேஷ்பாபு, கேசவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், கல்வித்துறையின் தாமதமான விசாரணை, வினாத்தாள் கசிந்ததின் பின்னணியில் உள்ள மர்மம் குறித்து, உயர் அதிகாரிகள் பல்வேறு விளக்கங்கள் கேட்டபோதிலும், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனிடையே, வினாத்தாள் வெளியான விவகாரத்தில், உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தலைமை ஆசிரியர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பில், தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு, புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: முறைகேடு நடந்து ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரிகள் மீதான பிடி இறுகுவதை திசை திருப்பும் நோக்கில், இந்த புகார் அளிக்கப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், வினாத்தாள் வெளியான விவகாரத்தை மூடி மறைக்க, மாவட்டத்தின் உயர் அதிகாரி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு காரணம் ஏற்கனவே திட்டமிட்டு, வினாத்தாள் கசிய விடப்பட்டது தான். அதாவது குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் ஒருவருக்கு, மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கிருந்து அருகில் உள்ள மாவட்ட தனியார் பள்ளிக்கு வினாத்தாள் கசிய விடப்பட்டது. அப்பள்ளியிலிருந்து பிற பள்ளிகளுக்கு வினாத்தாள் பரவியுள்ளது. இந்த நெட்வொர்க் குறித்து, துறையின் உயர் அதிகாரிகள் வரை தெரிந்தும், ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதற்காக தனியார் பள்ளிகளிடமிருந்து, ஜெயமான அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஒருவர் மூலமாக சிறப்பான பலனை மாவட்ட உயர் அதிகாரி பெற்று வருகிறார்.

சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் மீது, ஏற்கனவே மாணவர்களின் விவரங்களை தனியார் கல்லூரிகள், போட்டித்தேர்வு அகாடமிக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. இது தவிர, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதாக கூறி, தனியாரிடம் இருந்து நன்கொடை, உண்டு உறைவிட பள்ளிகளில் கையாடல் என அடுத்தடுத்து பல்வேறு புகார்கள், சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது குவிந்து வருகிறது. எனவே, இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Salem ,
× RELATED ஏற்காட்டில் 49வது கோடை விழா; நாளை மலர் கண்காட்சி துவக்கம்