நீயெல்லாம் ஒரு அதிகாரியா? உங்கவீட்டு பெண்களை இப்படி பண்ணுவீயா?.. துணை சபாநாயகர் சர்ச்சை

 

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் வசதிக்காக சொரத்தூர் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய இடத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்ல நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக துறையூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் உதயகுமார் என்பவரை நோக்கி துணை சபாநாயகர் ரவிசங்கர் பாய்ந்தார். பொதுமக்கள் முன்னிலையிலேயே ‘நீங்களெல்லாம் ஒரு அதிகாரியா? அரை மணி நேரமாக பேருந்து இல்லை என்கிறார்கள்.

உங்கள் வீட்டு பெண்கள் என்றால் இப்படி நடந்து போவார்களா? நேற்று ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார்… என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ என ஏகத்துக்கும் சத்தம் போட்டு ‘அர்ச்சனை’ செய்தார். அதிகாரியை அவர் திட்டி தீர்த்த அடுத்த சில நிமிடங்களில், அந்த வீடியோ கட்சி நிர்வாகிகளின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும், சமூக வலைதள ‘ரீல்ஸ்’ களிலும் ‘தலைவரின் அதிரடி ஆக்க்ஷன்’ என்ற பின்னணி இசையோடு வலம் வரத்தொடங்கியது. இதை பார்த்த பொதுமக்கள், துணை சபாநாயகர் ஆய்வு செய்ய வந்தாரா?….இல்லை சோசியல் மீடியாவுக்கு கன்டென்ட் எடுக்க வந்தாரா?… என்று முணுமுணுக்க தொடங்கினர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, பேருந்து நிலைய பணிகள் நடப்பதால் சில நடைமுறை சிரமங்கள் இருப்பது உண்மை தான். குறைகள் இருந்தால் தனி அறையிலோ அல்லது அரசு ரீதியாகவோ சுட்டிக்காட்டி சரி செய்ய சொல்வதுதான் மக்கள் பிரதிநிதியின் கடமை. அதை விடுத்து, கட்சி தொண்டர்கள் மத்தியில் ‘மாஸ்’ காட்டுவதற்காக, பொதுமக்கள் முன்னிலையில் ஒரு அரசு அதிகாரியை தரக்குறைவாக நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: