பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றிருந்த நிலையில், சில்ஹெட்டில் நடந்த இரண்டாவது போட்டியிலும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகத் தன்வசமாக்கியுள்ளது.
இதற்கு முன்பு 2024-ஆம் ஆண்டும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வங்காளதேசம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்து வங்காளதேச அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 437 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இந்த இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு, விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒற்றை ஆளாகப் போராடி 94 ரன்கள் எடுத்தார். சஜித் கானுடன் இணைந்து அவர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், ஆட்டத்தின் 5-ஆம் நாளான புதன்கிழமை ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு சரிந்தது.
அடுத்த 13 பந்துகளுக்குள் ரன் ஏதும் எடுக்காமல் கடைசி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 358 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. வங்காளதேச அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தஜுல் இஸ்லாம் மிகச்சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். டெஸ்ட் போட்டிகளில் இது இவருடைய 18-வது 5 விக்கெட் சாதனையாகும்.
இந்த அபார வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வங்காளதேச அணி 58.33% புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. வங்காளதேசத்தின் இந்த எழுச்சியால், இந்திய அணி 48.15% புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, வெறும் 8.33% புள்ளிகளுடன் 8-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 87.50% புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
