- சென்னை
- ஐதராபாத்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- ஐபிஎல்
- சென்னை செப்பாகம்
- எம். ஏ. சிதம்பரம் திடல்
- சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிப் பெற்றது. ஐபிஎல் தொடரின் 63வது போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் திடலில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து அதன் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். துவக்கத்தில் அதிரடி காட்டி ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன், பேட் கம்மின்ஸ் பந்தில் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, உர்வில் படேல் 13 ரன்னில், ஷகிப் உசேன் பந்தில் கிளீன் போல்டாகி வீழ்ந்தார்.
அதன் பின் ருதுராஜ், கார்த்திக் சர்மா இணை சேர்ந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணை 42 ரன்கள் சேர்த்த நிலையில், 10வது ஓவரை வீசிய பேட் கமின்ஸ், கார்த்திக் சர்மாவை (19 பந்து, 32 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார். அவரைத் தொடர்ந்து பேட் கமின்ஸ் வீசிய 12வது ஓவரில், ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் சென்னை அணியின் ரன் குவிக்கும் வேகம் வெகுவாக குறைந்தது. அதன் பின் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய டெவால்ட் புரூவிஸ், 27 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன் குவித்த நிலையில், ஈஷன் மலிங்கா பந்தில் கிளீன் போல்ட் ஆனார்.
பின்னர், சிவம் தூபே, பிரசாந்த் வீர் இணை சேர்ந்தனர். ஷகிப் உசேன் வீசிய 19வது ஓவரில் சிவம் தூபே (23 பந்து, 26 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் பிரசாந்த் வீர் (11 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அகீல் ஹொசேன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் கேப்டன் பேட் கமின்ஸ் 3, ஷகிப் உசேன் 2, ஈஷன் மலிங்கா, பிரபுல் ஹிங்கே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது.
வேகமாய் ரன் குவித்து வேகத்தில் வீழ்ந்த சஞ்சு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், துவக்கம் முதல் அடித்து ஆடத் துவங்கினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகள் விளாசி 27 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால், 2.3 ஓவரில் சிஎஸ்கே 31 ரன்களை எட்டிய நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கமின்ஸின் அதிவேக பந்தை எதிர்கொண்டு இஷான் கிஷணிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின், சிஎஸ்கேவின் ரன் குவிப்பு வேகம் குறையத்துவங்கியது.
