சென்னை: சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் ஒரு குதிரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட குதிரைகளிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஹரியானா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரைக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட குதிரைகளின் மாதிரிகள் ஹரியானாவில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. மேலும் குதிரை பராமரிப்பாளர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, கோவளம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய கடற்கரைகளில் சவாரிக்காக 200க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குதிரைகள் பெரும்பாலும் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் மற்றும் சுவாமி சிவானந்தா சாலை ஆகிய பகுதிகளில் தாற்காலிகமாக பராமரிக்கப்படுவதால் இந்த பகுதியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மாநில அரசின் விதிகளின் அடிப்படையில் குதிரைகளுக்கான உரிமம், பதிவு, மருத்துவ பரிசோதனை, உடல்தகுதி சான்றிதழ் மற்றும் தடுப்பூசி பதிவுகள் கட்டாயமாக இருக்ககூடிய நிலையில், இனி வரும் நாட்களில் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
