23 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

 

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலியிடங்கள் 23 ஆக இருந்த நிலையில் 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது 52 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இந்த மாதம் இறுதியில் மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு பெறுவதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 51 ஆக குறைந்துவிடும். 24 நீதிபதிகளின் பதவிகள் காலியாக உள்ளன.

நீதிபதிகளின் காலி பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் 19 புதிய நீதிபதிகளுக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த 2005 முதல் பரிந்துரை செய்யப்பட்ட 19 நீதிபதிகளுக்கு பதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதிகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களில் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் தந்துள்ளது. வழக்கறிஞர்கள் பிரிவில் இருந்து வழக்கறிஞர்கள் என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் தந்துள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஆணையை பிறப்பிப்பார். விரைவில் இந்த நடைமுறைகள் தொடங்கவுள்ளது. 19 பேர் நியமிக்கப்படும் பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 3 ஆக குறையும்.

Related Stories: