வாலாஜாபாத் பேரூராட்சி வல்லபாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு; பள்ளம் தோண்டியதால் பரபரப்பு: ரயில்வே அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

 

வாலாஜாபாத், மே 19: வாலாஜாபாத் பேரூராட்சி வல்லபாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க முன்னறிவிப்பின்றி பள்ளம் தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ரயில்வே அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட வல்லபாக்கம் நேரு நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் வாலாஜாபாத் நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் எனில் வல்லபாக்கம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்திரா நகர், சேர்க்காடு, வல்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த சாலை வழியாக கார், லாரி, பஸ் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்கள் நாள்தோறும் இந்த ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பரபரப்பாகவே காணப்படும் இந்த சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக ரயில்வே கேட் அருகில் விளம்பர பதாகை ஒன்று வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு எந்த வித முன் அறிவிப்பும இன்றி ரயில்வே துறையினர் இந்த ரயில்வே கேட்டை மூடியது மட்டுமின்றி, இந்த வழியை எந்த எந்த போக்குவரத்திற்கும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். நேற்று காலை இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வல்லபாக்கம் ரயில்வே கேட் அருகே ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வாலாஜாபாத் காவல் துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினர் அப்பகுதி மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது மட்டுமின்றி கல்லூரி, பள்ளி செல்லும் பேருந்துகள், அரிசி ஆலைகளுக்கு செல்லும் கனரக லாரிகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை அமைத்தால் இதுபோன்ற கனரக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படும். மேலும் ஒரு வாகனம் சென்ற பின்பு மீண்டும் இன்னொரு வாகனம் செல்ல வேண்டிய சூழலும் இப்பகுதியில் நிலவும். குறிப்பாக இந்த ரயில்வே பாதையை ஒட்டி மழைநீர் வடிகால்வாய் உள்ள நிலையில் எப்போதுமே ஈரப்பதமாக காணப்படும் பகுதியாக இப்பகுதி உள்ளது.

சிறிதளவு பள்ளம் தோண்டினாலே நீர் சுரக்கும் பகுதி இது. இங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கு பள்ளம் தோண்டினால் அதிகளவு நீர் சுரக்கும் சூழ்நிலை இங்கு உள்ளது. எனவே இப்பகுதியில் சுரங்க பாதை அமைக்கும் பணியை கைவிட வேண்டும். மேலும் வல்லபாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையை இரவோடு இரவாக தோண்டுவதற்கு காரணம் என்ன? ரயில்வே கேட்டை மூடுவதற்கும் இங்குள்ள சாலையை தோண்டுவதற்கும் இப்பகுதியில் உள்ள மக்களிடம் முன் அறிவிப்பு செய்தீர்களா? இங்கு சுரங்கப்பாதை வருவதற்கு முன் இந்த சுரங்கப் பதை வழியாக என்னென்ன வாகனங்கள் செல்லலாம்? இதன் மூலம் உங்களுக்கு என்ன பயன்கள் என்பது குறித்து ரயில்வே துறையினர் இப்பகுதி மக்களிடம் விரிவாக கூறினீர்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இங்குள்ள மக்கள் எழுப்பினர்.

இதனையடுத்து ரயில்வே துறையினர் மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளங்களை மூட ஏற்பாடு செய்தனர் இதனையடுத்து திரண்டு இருந்த கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

தொற்று நோய் அபாயம்
ரயில் பாதையை ஒட்டியே வயல்வெளிகளுக்கு செல்லும் மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ளதால் சிறிய அளவில் மழை பெய்தாலே அந்தப் பகுதியில் தேங்கும் மழை நீர் பல மாதங்களாக இருக்கும். இந்தநிலையில் சுரங்க பாதைக்கு பள்ளம் தோண்டினால் அதிகளவில் நீர் சுரக்கும். மேலும் மழை நீர் சுரங்கப் பாதையில் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவும்.

சரமாரி கேள்வி
வல்லபாக்கம் ரயில்வேகேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக ரயில்வே நிர்வாகம் திடீரென கேட்டை மூடி அப்பகுதியில் முன்னறிவிப்பின்றி சாலையில் பள்ளம் தோண்டியது. இதனால் கிராம மக்கள் திரண்டு ரயில்வே நிர்வாகத்திடம் சரமாரியான கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: