திருப்போரூர், மே 15: தண்டலம் ஊராட்சியில் செயல்படும் மதுபான கிளப்பை அகற்ற வேண்டும் என்று வட்டாசியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருப்போர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மதுபான கிளப் தண்டலம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மேலும், இந்த மதுபான கிளப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மதுப்பிரியர்கள், தங்களின் வாகனங்களை ஓ.எம்.ஆர். சாலையில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பிரதான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இந்த மதுபான கிளப்பை அகற்ற வேண்டும் என தண்டலம் கிராம மக்கள், திருப்போரூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஆறுமுகம், பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு அனுப்பி, மதுக்கடையை மூட உரிய பரிந்துரையை செய்வதாக உறுதியளித்தார்.
