இஸ்லாமாபாத்: ஈரான் – அமெரிக்கா போரில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வரும் அதே வேளையில், சவுதி அரேபியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது. இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் 8,000 துருப்புகளையும், ஒரு போர் விமானப் படை அணியையும், ஒரு வான் பாதுகாப்பு அமைப்பையும் சவுதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கிய JF-17 தண்டர் போர் விமானங்கள், இரண்டு ஆளில்லா விமானப் படைப்பிரிவுகள் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியா மேலும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில், அந்நாட்டின் ராணுவத்திற்குத் துணையாகச் செயல்படுவதற்காக கணிசமான மற்றும் போரிடும் திறன் கொண்ட ஒரு படை வலிமையை பாகிஸ்தான் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையேகடந்த ஆண்டு கையெழுத்தான இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முழுமையான விதிமுறைகள் ரகசியமானவை. ஆனால், ஒரு தாக்குதல் நிழழ்ந்தால் பாகிஸ்தானும், சவூதி அரேபியாவும் ஒருவருக்கொருவர் உதவிட வர வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட ஒப்பந்தம் அது என்று இரு தரப்பினரும் கூறியுள்ளனர். முன்னதாக இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியாவை பாகிஸ்தானின் அணுசக்திப் பாதுகாப்புக்குக் கீழ் கொண்டு வருகிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
