காபூல்: கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அங்கு ஏற்கனவே பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ‘துணைகளுக்கு இடையிலான பிரிவினை கொள்கைகள்’ என்ற பெயரில் 31 விதிகளைக் கொண்ட புதிய குடும்ப நலச் சட்டத்தை தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா தற்போது அமல்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தின்படி, பூப்படைந்த ஒரு கன்னிப்பெண் திருமணத்தின் போது மவுனமாக இருந்தால், அதனை அவரது சம்மதமாகவே கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், சிறுமிகள் அல்லது ஏற்கனவே திருமணமான பெண்கள் மவுனமாக இருந்தால் அதனை சம்மதமாக கருத முடியாது என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் நீதிமன்றங்களின் ஒப்புதலுடன் சிறுவர் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தில், தந்தை மற்றும் தாத்தாக்களுக்கு திருமண விவகாரங்களில் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் விமர்சகர் ஃபஹிமா முகமது கூறுகையில், ‘சிறுவர் திருமணங்களில் ஒருபோதும் உண்மையான சம்மதம் இருக்க முடியாது; சிறுமி மவுனமாக இருப்பதை சம்மதமாக கருதுவது அவர்களின் குரலையும் உரிமைகளையும் பறிக்கும் செயலாகும்’ என்று எச்சரித்துள்ளார்.
