தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிப்பு குத்தகைக்கு விடும் பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சிவகாசி, மார்ச் 2: பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவோர் மீது வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 1075 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் 3 விதமான உரிமங்களை வழங்குகின்றனர். பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்க அனுமதியில்லை. ஆனால், பலர் விதிகளை மீறி பேன்சி ரகவெடிகள் தயாரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் உள்ள ஆலைகளில் விதி முறைகளுக்கு உட்பட்டு பேன்சி ரக வெடிகள் தயாரிக்க வேண்டும். ஆலைகளை குத்தகைக்கு விட அனுமதி கிடையாது.

ஆனால், பெரும்பாலான ஆலைகளை உரிமையாளர்கள் சட்ட விரோதமாக குத்தகைக்கு விட்டு வருகின்றனர். ஒரு பட்டாசு ஆலையில் ஒரு அறைக்கு ரூ.3 லட்சம் வரை குத்தகை பணம் பெறப்படுகிறது. இதனால் ஆலை உரிமையாளர்கள் பல லட்ச ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். ஆலையில் பெரிய மரங்கள் இருந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சம் பெற்று கொண்டு குத்தகை விடும் அவலமும் நிலவுகிறது.

சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் 20 அறைகள் இருந்தால் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வரை குத்தகை விடப்படுகிறது. அறைகளை குத்தகை எடுப்போர் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் பேன்சி ரக வெடிகளை மட்டுமே தயாரித்து வருகின்றனர். மேலும் ஒரு அறையில் 20 பேர் வரை பணி அமர்த்தப்படுகின்றனர். குத்தகை எடுத்தவர்கள் உற்பத்தி செய்யும் பட்டாசுகளை அறைக்கு அருகிலேயே திறந்த வெளியில் இருப்பு வைத்து கொள்கின்றனர். இதனால் ஏதாவது ஒரு அறையில் லேசாக தீ பற்றினால் கூட பக்கத்தில் உள்ள அடுத்தடுத்து அறைகளில் உள்ள பட்டாசுகளில் தீப்பிடித்து அதி பயங்கர சத்தத்துடன் வெடித்து பலர் பலியாகும் சம்பவம் தொடர்கிறது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பிப்.12ம் தேதி அறைகளை குத்தகைக்கு விட்டு அதிக ஆட்கள் பணிபுரிந்து வந்ததாலேயே விபத்து ஏற்பட்டு 23 பேர் வரை பலியாகியுள்ளனர். இதே போன்று மூன்று நாட்களுக்கு முன் காளையார்குறிச்சி தங்கராஜ்பாண்டியன் பட்டாசு ஆலையிலும் அறைகளை குத்தகைக்கு விட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு பலர் அறைகளை குத்தகைக்கு எடுத்து பேன்சி வெடிகள் தயாரித்து வந்துள்ளனர். இதனாலேயே விபத்து ஏற்பட்டு 6 பேர் வரை பலியாகியுள்ளனர்.

திறந்த வெளியில் பேன்சி ரக வெடிகளை இருப்பு வைத்திருந்ததால் வெடித்து 10க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்துள்ளன. வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் இது போன்று செயல்படும் ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விட்டால் அந்த ஆலையில் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ரத்து செய்யவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற விதி மீறல்களை தடுக்காவிடில் பட்டாசு ஆலை விபத்தில் மனித உயிர்கள் மலிவாக மடிந்து போகும் அவலம் தொடரும் வாய்ப்பு உள்ளது.

Related Stories:

>