சென்னை: கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிக்க திறக்கும் நாள் தள்ளி போக கூடும் என்று சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவின. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
கோடைகால விடுமுறை முடித்து பள்ளிகள் திறப்பது குறித்தும், நாளை மறுநாள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டப்படி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் நாளை மறுநாள் (மே 20) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.
