கேரளத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரளத்தின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றனர். காங்கிரசைச் சேர்ந்த 11 பேர், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 10 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பாஜ முதன் முதலாக 3 தொகுதிகளை கைப்பற்றியது. இதற்கிடையே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் வி.டி. சதீசன் ஆகியோர் போட்டி போட்டனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வி.டி. சதீசனை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்தது. இது கே.சி. வேணுகோபாலுக்கும், ரமேஷ் சென்னித்தலாவுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கே.சி. வேணுகோபாலுக்கு காங்கிரசில் உயர் பதவி வழங்குவதாகவும், ரமேஷ் சென்னித்தலாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆனார்கள்.

இந்நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி., தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: