சாத்தூர் தொகுதியில் தவெகவில் வெடித்தது கோஷ்டி மோதல்: மாறி, மாறி போஸ்டர் யுத்தம்

சாத்தூர்: சாத்தூர் தொகுதியில் தவெக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் உள்ளது. விருதுநகர் மத்திய தவெக மாவட்ட செயலாளர் சின்னப்பர். சாத்தூரை சேர்ந்த இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். மாவட்ட இணை செயலாளர் அஜித். இவர்களிடையே ஆரம்பம் முதலே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக ஆலோசனை கூட்டம், தெருமுனை பிரசாரம் உள்ளிட்டவை நடைபெறும் போது, அஜித் தரப்பிற்கு மாவட்ட செயலாளர் சின்னப்பர் முறையாக அழைப்பு விடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் அஜித் ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளரிடம் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.

சாத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் சின்னப்பர் காய் நகர்த்தி வந்தார். தவெக தலைமை அவருக்கு சீட் வழங்காமல் இணை செயலாளரான அஜித்திற்கு வழங்கியது. இதனால் ஆத்திரமடைந்த சின்னப்பர், தேர்தலில் அஜித்திற்கு ஆதரவாக வேலை செய்யாமல் இருந்தாக கூறப்படுகிறது. சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் அஜித் தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அஜித், தலைமையிடம் சின்னப்பரின் செயல்பாடு குறித்து குமுறியுள்ளார்.

இதையடுத்து தவெக தலைமை சின்னப்பரை, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அசைந்து கொடுக்காத சின்னப்பர், சாத்தூர் தொகுதியில் தனக்கே அதிக செல்வாக்கு இருப்பதுபோல் காட்டுவதற்காக, திரும்பும் பக்கம் எல்லாம், விஜய்யை வாழ்த்தி போஸ்டர்கள், பேனர்கள் வைத்துள்ளார். இதில் இணை செயலாளர் அஜித்தின் புகைப்படம் இல்லை. இதற்கு போட்டியாக அஜித்தின் ஆதரவாளர்களும் சின்னப்பரின் புகைப்படம் இல்லாமல் சாத்தூர் தொகுதியில் பேனர் வைத்து வருகின்றனர். இதனால் சாத்தூர் தொகுதியில் யார் பக்கம் இருப்பது என்று தெரியாமல் நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Related Stories: