அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லாட்டரி குடும்பம்; தமிழகத்தில் மருமகன் அமைச்சர், மனைவி எம்எல்ஏ: புதுச்சேரியில் மந்திரி பதவி கேட்கும் மார்ட்டின் மகன்

 

 

 

 

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நேற்றுமுன்தினம் 5வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பாஜ தரப்பில் மீதமுள்ள ஒரு அமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் காரைக்காலை சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரனுக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனக்கும் அமைச்சர் பதவி வேண்டுமென டெல்லி சென்று பாஜ மேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது. அதேபோல் பாஜ எம்எல்ஏ ஜான்குமார், தனக்கு அமைச்சர் பதவி தராவிட்டாலும் பராவாயில்லை, அதனை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு வழங்க வேண்டும் எனக்கூறி கட்சி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அதேபோல் புதுச்சேரி பாஜவின் முக்கிய நிர்வாகிகளும் மார்ட்டினுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். ஆனால் இதற்கு ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனாலும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவில் இருந்து, நாங்கள் கூட்டணி கட்சியில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்வோம் என பாஜ கூறி வருகிறது. இதற்கிடையே காரைக்காலை சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரனை, சபாநாயகர் பதவியை ஏற்க சொல்லி பாஜ தலைமை கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பாஜவின் மற்றொரு அமைச்சராக ஜோஸ் சார்லஸ் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் மீதமுள்ள 2 அமைச்சர் பதவிகளை மூத்த எம்எல்ஏக்கள் கேட்டு தொடர்ந்து ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

வரும் 18ம் தேதி புதிய அமைச்சர்கள் யார், யார் என்பதற்கு விடை கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. வழக்கமாக மற்ற மாநிலங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் யார், அவர்கள் எப்போது பதவியேற்பார்கள் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படும். ஆனால் புதுவையில் மேலும் 3 அமைச்சர்கள் யார் என்பது குறித்து ரகசியம் காக்கப்படுகிறது. இப்பதவிகளை பிடிக்க பாஜ, என்ஆர் காங்கிரசில் மட்டுமின்றி லஜக, அதிமுக எம்எல்ஏக்களிடமும் கடும் போட்டி நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க, தற்காலிக சபாநாயகரை (அதிமுக அன்பழகன்) நியமிப்பதற்கான கோப்பை ரங்கசாமி, கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு அனுமதி கிடைத்தபின் சட்டசபை கூட்டப்பட்டு புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் தவெக சார்பில் போட்டியிட்ட மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தற்போது அமைச்சராக உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி லீமா ரோஸ், எம்எல்ஏவாக உள்ளார். இந்த சூழலில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வென்ற மகன் ஜோஸ் சார்லஸ் பாஜ கூட்டணியில் அமைச்சர் பதவி கேட்டு அழுத்தம் கொடுப்பதும், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சியில் அதிகார பதவியில் அமர்ந்து ஆதிக்கம் பெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: