சிறுநீரக நோய்களும் சிறுநீரகப் பாதுகாப்பும் …ஓர் அறிமுகம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை

அன்றாடம் நான் மருத்துவமனையில் சந்திக்கும் நபர்களில் பலர், தங்கள் உடல்நலம் குறித்துப் பேசும்போது இதயத்தைப் பற்றியும், நுரையீரலைப் பற்றியும் காட்டும் அக்கறையைச் சிறுநீரகத்தின் மீது காட்டுவதில்லை. ‘‘டாக்டர், மூச்சு வாங்குது”, ‘‘நெஞ்சு வலிக்குது” என்று ஓடி வருபவர்கள், சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை அதன் இறுதி நிலையில் மட்டுமே உணர்கிறார்கள். சிறுநீரகம் என்பது சத்தமில்லாமல் வேலை செய்யும் ஒரு உறுப்பு.

அதன் 70% முதல் 80% வரை செயல்பாடு குறைந்தாலும் கூட அது வெளியே அறிகுறிகளைக் காட்டாமல் உழைத்துக் கொண்டே இருக்கும். எப்போது அதன் செயல்பாடு 15% க்கும் குறைவாகச் செல்கிறதோ, அப்போதுதான் கால் வீக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். அந்த நிலையை நாம் ‘சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். ஆனால், விழிப்புணர்வு இருந்தால் இந்த நிலையை நாம் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த தொடர் வாயிலாக, அடுத்த 10 இதழ்களில் சிறுநீரகத்தின் ரகசியங்களையும், அதைத் தாக்கும் 10 முக்கிய நோய்களையும் பற்றி ஒரு மருத்துவப் பாடமாக அல்லாமல், உங்கள் குடும்ப உறுப்பினராக நான் உரையாடப் போகிறேன்.

சிறுநீரகம் – உடலின் உன்னத தொழிற்சாலை:-

சிறுநீரகம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ‘சிறுநீர் கழிப்பது’ மட்டும்தான். ஆனால், மருத்துவ ரீதியாகச் சிறுநீரகம் என்பது ஒரு நவீன தொழிற்சாலைக்கு ஒப்பானது.

1. சிறுநீரகத்தின் அமைப்பு

நமது முதுகெலும்பின் இருபுறமும், விலா எலும்புகளுக்குச் சற்று கீழே அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 150 கிராம் எடை கொண்டவை. இந்தச் சிறிய உறுப்பிற்குள் ‘நெஃப்ரான்’ (Nephron) எனப்படும் சுமார் 10 லட்சம் குட்டி வடிகட்டிகள் உள்ளன. இந்த நெஃப்ரான்கள்தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்கின்றன.

2. வியக்கத்தக்க பணிகள்

* நச்சு நீக்கம்: இரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின் போன்ற கழிவுகளை நீக்கிச் சிறுநீராக வெளியேற்றுகிறது.

* தண்ணீர் சமநிலை: உடலில் நீர் அதிகமாக இருந்தால் அதை வெளியேற்றவும், நீர் குறைவாக இருந்தால் அதைச் சேமிக்கவும் இது உதவுகிறது.

* உப்பு மற்றும் அமிலக் கட்டுப்பாடு: சோடியம், பொட்டாசியம் மற்றும் இரத்தத்தின் pH அளவைத் துல்லியமாகப் பராமரிக்கிறது.

* ஹார்மோன் உற்பத்தி: இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் ‘எரித்ரோபொயட்டின்’, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ‘ரெனின்’ (Renin) மற்றும் எலும்புகளை வலுவாக்கும் வைட்டமின்-டி-யை ஆக்டிவேட் செய்யும் பணியைச் செய்கிறது. இந்த தொடரின் முதல் அத்தியாயம்:

சிறுநீரகக் கற்கள் (Renal Calculi)

இன்றைய நவீன வாழ்க்கை முறையாலும், உணவு மாற்றங்களாலும் உலகெங்கும் மக்கள் பாதிப்படையும் ஒரு நோய் ‘சிறுநீரகக் கற்கள்’. பொதுவாகச் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், அது தரும் வலி பிரசவ வலிக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.

1. கற்கள் எப்படி உருவாகின்றன?

சிறுநீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன. இவை திரவ நிலையில் இருக்கும் வரை சிக்கலில்லை. ஆனால், சிறுநீரில் நீரின் அளவு குறையும்போதோ அல்லது உப்புகளின் அளவு அதிகரிக்கும்போதோ, அவை படிகங்களாக (Crystals) மாறுகின்றன. இந்தக் குட்டிப் படிகங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு காலப்போக்கில் கற்களாக மாறுகின்றன. இவை மணல் துகள் அளவிலிருந்து ஒரு பெரிய கோல்ஃப் பந்து அளவு வரை வளரக்கூடும்.

2. கற்களின் வகைகள்: உங்கள் கல் எதனால் ஆனது?

அனைத்துக் கற்களும் ஒரே மாதிரியானவை அல்ல. அவற்றின் வேதியியல் அமைப்பைப் பொறுத்து நான்கு வகைப்படும்:

A. கால்சியம் கற்கள் (Calcium Oxalate): இதுவே 80% மக்களுக்கு ஏற்படும் பொதுவான வகை. நாம் உண்ணும் உணவில் உள்ள ஆக்ஸலேட், இரத்தத்தில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து கற்களாக
மாறுகின்றன.

B.யூரிக் அமில கற்கள்: புரதச் சத்து நிறைந்த (குறிப்பாக அசைவம்) உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இது வர வாய்ப்பு உண்டு.

C.ஸ்ட்ரூவைட் கற்கள் (Struvite Stones): இவை பெரும்பாலும் சிறுநீரகத் தொற்றால் ஏற்படுகின்றன. இவை மிக வேகமாக வளர்ந்து சிறுநீரகத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டவை.

D.சிஸ்டைன் கற்கள் (Cystine Stones): இது மிகவும் அரிதானது. பரம்பரைக் கோளாறு காரணமாகச் சிறுநீரில் ஒரு வகை அமிலம் அதிகம் சுரப்பதால் ஏற்படுகிறது.

3. கற்கள் உருவாகக் காரணங்கள் (Risk Factors)

* நீர்ச்சத்து குறைபாடு: இதுவே முதன்மைக் காரணம். ஒரு நாளைக்குத் தேவையான அளவு நீர் அருந்தாதபோது, சிறுநீர் அடர்த்தியாகி கற்கள் உருவாகின்றன.

* உணவு முறை: அதிகப்படியான உப்பு (சோடியம்) சேர்ப்பது கால்சியத்தைச் சிறுநீரில் அதிகம் வெளியேற்றச் செய்து கற்களை உருவாக்கும்.

* சர்க்கரை மற்றும் இனிப்பு: செயற்கை இனிப்புகள் சேர்த்த குளிர்பானங்கள் கற்கள் உருவாவதை ஊக்குவிக்கின்றன.

* உடல் பருமன்: அதிக உடல் எடை மற்றும் தொப்பை இருப்பவர்களுக்குச் சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

* வெப்பநிலை: வெயில் காலங்களில் அல்லது வெப்பமான தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வியர்வை மூலம் நீர் வெளியேறுவதால் சிறுநீர் அடர்த்தியாகிறது.

4. அறிகுறிகள்: எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

சிறுநீரகக் கல் அதன் இடத்திலேயே இருக்கும்போது வலி தெரியாது. அது நகரத் தொடங்கிச் சிறுநீர்க்குழாயில் (Ureter) அடைப்பை ஏற்படுத்தும் போதுதான் பிரச்னை ஆரம்பிக்கும்.

* முதுகு வலி (Renal Colic): விலா எலும்புக்குக் கீழே ஆரம்பித்து அடிவயிறு மற்றும் தொடை இடுக்கு வரை பரவும் தாங்க முடியாத வலி.

* சிறுநீர் மாற்றங்கள்: சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், இரத்தம் கலந்து சிவப்பு நிறத்தில் வெளியேறுதல் அல்லது துர்நாற்றம்.

* வாந்தி மற்றும் குமட்டல்: வலியின் தீவிரத்தால் ஏற்படும் நரம்புத் தூண்டுதலால் வாந்தி ஏற்படலாம்.

* காய்ச்சல்: கற்களுடன் சேர்ந்து தொற்று (Infection) இருந்தால் கடும் குளிருடன் காய்ச்சல் வரலாம். இது ஒரு அவசர மருத்துவ நிலை (Medical Emergency).

5. பரிசோதனைகள்

ஒரு மருத்துவராக, நாங்கள் முதலில் உங்களை உடல் பரிசோதனை செய்வோம். அதன் பிறகு:

* சிறுநீர் பரிசோதனை: இதில் கற்கள் உண்டாக்கும் படிகங்கள் அல்லது இரத்தம் உள்ளதா எனப் பார்ப்போம்.

* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்: இது மிகவும் எளிய மற்றும் பாதுகாப்பான சோதனை. கர்ப்பிணிகளுக்கும் கூடச் செய்யலாம்.

* CT ஸ்கேன் (NCCT KUB): இதுதான் இன்று ‘கோல்ட் ஸ்டாண்டர்ட்’ என்று அழைக்கப்படுகிறது. கல்லின் துல்லியமான அளவு, கடினத்தன்மை மற்றும் அது இருக்கும் இடத்தை இது அப்படியே காட்டும்.

6. நவீன சிகிச்சை முறைகள்

கற்கள் என்றாலே அறுவை சிகிச்சை என்று பயப்படத் தேவையில்லை.

* மருந்து சிகிச்சை (Medical Expulsive Therapy): 5mm க்கும் குறைவான கற்களை அதிக நீர் அருந்துதல் மற்றும் மருந்துகள் மூலம் 90% வெளியேற்றிவிடலாம்.

* ESWL (Lithotripsy): உடலுக்கு வெளியிலிருந்து ‘அதிர்வலைகளை’ அனுப்பி, அறுவை சிகிச்சை இன்றி கற்களைப் பொடி செய்யும் முறை.

* RIRS (லேசர் சிகிச்சை): சிறுநீர்ப் பாதை வழியாக ஒரு கேமராவைச் செலுத்தி, லேசர் மூலம் கல்லைத் தூளாக்கும் நவீனத் தொழில்நுட்பம். இதில் தழும்புகள் எதுவும் ஏற்படாது.

* PCNL: கல் மிகப் பெரியதாக (2cm க்கும் மேல்) இருந்தால், முதுகில் ஒரு சிறிய துளை போட்டு கல்லை அகற்றும் முறை.

7. தடுப்பு முறைகள்: மீண்டும் கல் வராமல் இருக்க…

சிறுநீரகக் கல் ஒருமுறை வந்தவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வர 50% வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்க:

1. 3 லிட்டர் தண்ணீர்: இது ஒரு மருந்தைப் போன்றது. உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

2. எலுமிச்சை ஜூஸ்: எலுமிச்சையில் உள்ள ‘சிட்ரேட்’ (Citrate) கற்கள் உருவாவதை வேதியியல் ரீதியாகத் தடுக்கும்.

3. உப்பைக் குறைக்கவும்: ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

4. கல்சியம் மற்றும் ஆக்ஸலேட்

சமநிலை: பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளைத் தவிர்க்கத் தேவையில்லை. ஆனால் ஆக்ஸலேட் நிறைந்த தக்காளி விதை, பசலைக்கீரை, சாக்லேட் போன்றவற்றைச் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்தத் தொடர் வெறும் தகவல்களுக்கானது மட்டுமல்ல, இது உங்கள் வாழ்வியலை மாற்றப்போகும் ஒரு வழிகாட்டி. அடுத்து வரும் வாரங்களில் நாம் பேசப்போகும் தலைப்புகள் இதோ:

சிறுநீரகப் பாதை தொற்று (UTI), சர்க்கரை நோய் (Diabetic Nephropathy) ,இரத்த அழுத்தமும் சிறுநீரகமும் (Hypertension) ,வடிகட்டி வீக்கம் (Glomerulonephritis) ,மரபுவழி நீர்க்கட்டிகள் (Polycystic Kidney Disease) ,சிறுநீரகச் செயலிழப்பு (CKD) – நிலைகளும் தீர்வுகளும், டயாலிசிஸ்,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுமைக்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கான வழிகள் (Golden Rules).

சிறுநீரகம் பாதிக்கப்படும்போது அது முதலில் வலிப்பதில்லை. எனவே, ‘‘எனக்கு வலி இல்லை, நான் நலமாக இருக்கிறேன்” என்று இருந்துவிடாதீர்கள். குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘சிறுநீர் புரதம்’ (Urine Albumin) மற்றும் ‘இரத்த கிரியாட்டினின்’ (Serum Creatinine) பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். இந்தத் தொடர் உங்களைத் தெளிவுபடுத்தும், உங்கள் அச்சத்தைப் போக்கும், உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும். ஆரோக்கியமான சிறுநீரகம்… வளமான வாழ்க்கை!

தொடரும்…

தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்