சென்னை: அமைச்சர் பதவிக்காக ஆசைப்பட்டு கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை மக்களும், அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். பேட்டி விவரம்: அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கட்சித் தலைமை மற்றும் கொறடா மூலமாக மின்னஞ்சல், பதிவுத் தபால், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெளிவாக முன் கூட்டியே அறிவுறுத்தப்பட்டது . ஆனால், கட்சியின் அறிவுறுத்தலையும் மீறி சில முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமின்றி, கட்சிக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமுமாகும் .
தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. அந்த அரசில் இடம்பெறுவதற்காக, சுமார் ஆறு அமைச்சர் பதவிகளும், பத்து வாரியத் தலைவர் பதவிகளும் தருவதாக வாக்குறுதி அளித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஆசை வார்த்தை கூறி வளைத்துள்ளனர் . இதன் அடிப்படையில் தான் அவர்கள் வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் . இவர்களின் வெற்றிக்காக அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இரவு பகலாக உழைத்ததை மறந்து, இன்று அடையாளம் காட்டிய கட்சிக்கு அவர்கள் துரோகம் செய்துள்ளனர். தற்போதைய முதலமைச்சர் ‘தூய்மையான ஆட்சி நடத்துவேன்’ என்று கூறுகிறார். ஆனால், எதிர்க் கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களின் வீட்டிற்குச் சென்று வருவது எப்படித் தூய்மையான அரசியலாகும்? இது போன்ற குதிரை பேரங்களுக்கு இடமளிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியல் கட்சிகளில் பிளவுகள் சகஜம் தான்; ஆனால் வேறு எந்த தலைவரும் பிரிந்து சென்றவர்களின் வீட்டிற்குச் சென்றதில்லை . முதலமைச்சரின் இத்தகைய செயல்கள் தமிழக அரசியல் வரலாற்றிற்குத் தவறான முன்னுதாரணம் .
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே வென்றது. அதில் கட்சித் தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை ராஜினாமா செய்ததாலும், நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவும் அவர்களின் சொந்த பலம் 106 ஆகக் குறைந்தது . திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் மறைமுக ஆதரவினாலேயே அவர்கள் 118 என்ற பெரும்பான்மையைத் தொட்டு ஆட்சி அமைத்துள்ளனர் . மேலும், தமிழக வெற்றிக் கழகம் 34% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 66% மக்கள் அவர்களை எதிர்க்கின்றனர் . அதேவேளையில் அதிமுக கூட்டணி சுமார் 1 கோடியே 34 லட்சம் வாக்குகளைப் பெற்று மக்களிடம் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது . அதிமுகவில் வேட்பாளர்கள் எதேச்சதிகாரமாகத் தேர்வு செய்யப்படவில்லை. 38 மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டனர். அதில் 5% மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன .
அதிமுக, திமுகவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதை 100% உறுதியளிக்கிறேன் . எங்கள் கூட்டணியைத் தவிர வேறு யாருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை . திமுகவை எதிர்த்துத் தான் அதிமுக உருவானதே; அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் அவ்வாறு செய்வோம்?. ஆட்சிகள் மாறலாம்; ஆனால் சட்டமன்றத்தின் விதிகளும் மரபுகளும் மாறக்கூடாது . தற்போதைய சூழலில் அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் . ஆளுங்கட்சியில் அமைச்சர் பதவிக்காக ஆசைப்பட்டு கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை மக்களும், அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
