சி.வி.சண்முகத்தால் ஓரங்கட்டப்பட்ட விழுப்புரம் நிர்வாகி அதிமுகவில் மீண்டும் ஐக்கியம்: வைரலாகும் ஆடியோவால் சலசலப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சி.வி. சண்முகத்தால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக நிர்வாகி பசுபதி, நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் தன்னை அக்கட்சியில் ஐக்கியப்படுத்தி கொண்டார். இதனிடையே சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. பல தொகுதிகளில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டன. எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் உள்ளது. இந்த நிலையில் இபிஎஸ்சுக்கு எதிராக அதிமுகவில் வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தலைமையில் தனி அணியை உருவாகி உள்ளனர். அந்த அணி தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுக இரு அணி உருவாக முக்கிய காரண கர்த்தாவாக சி.வி.சண்முகம்தான் செயல்பட்டு உள்ளாராம்.

இதனிடையே சி.வி.சண்முகத்தால் ஓரங்கட்டப்பட்ட விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி நேற்று, சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார். சி.வி.சண்முகம் கட்சியின் பொதுச்செயலாளரையே மதிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் விரைவில் அவருக்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. இதற்கு இபிஎஸ் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன.

வைரலாகும் ஆடியோ: இதனிடையே கடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் இபிஎஸ்சை முதல்வராக்குவோம் என்று சி.வி.சண்முகம் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அதில், அதிமுகவில் நடப்பதை அருகில் இருந்து விளக்கு வைத்து பார்த்ததுபோல் சொல்வார்கள். அமித்ஷா பேசிவிட்டார். சி.வி.சண்முகம் வெளியேறுகிறார். தங்கமணி வெளியேறுகிறார். எங்கய்யா போனோம்?. உயிர் உள்ளவரை அதிமுக… இது எங்க கட்சி. எங்க கட்சிடா… இது அண்ணா திமுக தொண்டர்களால் நிரம்பிய கட்சி. தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி. தொண்டர்களுக்காக செயல்படுகின்ற இயக்கம். ஆகவே தயவுசெய்து மன உறுதியோடு இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் தைரியம் அதிமுகவை 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக உட்கார வைக்க வேண்டுமென அவர் பேசியுள்ளார். தற்போது அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு தவெகவிற்கு ஆதரவளிப்பது கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் செயல் என சி.வி.சண்முகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: