தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்; டிடிவி.தினகரன் கூடாரம் காலியாகிறது: துரோகத்தின் வழியில் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: அமமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் டிடிவி.தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி.தினகரன் தொடங்கினார். அக்கட்சியின் பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்பேன் என்று கூறி வந்தார். இந்நிலையில் திடீர் பல்டியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், அமமுக கூட்டணி வைத்தது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, மன்னார்குடியில் மட்டும் வென்றது. அந்த கட்சியின் எம்எல்ஏ காமராஜ், நேற்று சட்டசபையில் முதல்வர் விஜயை புகழ்ந்து, அவருக்கு ஆதரவாக பேசினார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தினகரனின் செயல்பாடு பிடிக்காமல் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி வருகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளராக இருந்த செந்தில் நாதன், கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தும், அதிமுகவை மீட்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கட்சி ஆரம்பித்த தினகரன், மீண்டும் எடப்பாடியை ஆதரித்ததுடன் துரோகத்தின் வழியில் நடப்பதாக செந்தில் நாதன் குற்றம் சாட்டி உள்ளார்.

அதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர அமமுக செயலாளராக இருந்தலக்கி நாசரும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். அதேபோல் அமமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் யானை காலிதும் விலகுவதாக தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் அக்கட்சியினர் அமமுகவில் இருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர். சுமார் 30 ஒன்றிய செயலாளர்கள் விலக உள்ளனர். இதுபோல் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வெளியேறி வருவதால் அமமுக கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுபற்றி அமமுகவினர் கூறுகையில், எந்த நோக்கத்துக்காக தினகரன் கட்சி ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தையே சிதைத்து விட்டார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தது தவறு. தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜவின் பேச்சை கேட்டு, கட்சியை அழித்து விட்டார். கொள்கையே இல்லாமல் செயல்படும் அவருடன் இனியும் பயணிக்க முடியாது. அமமுக மூழ்கும் கப்பலாக மாறி விட்டது என்று வேதனையுடன் கூறினர்.

Related Stories: