விழுப்புரம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 11 தேர்தகளில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா என அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனையும் நீக்கினார் எடப்பாடி. இதனால் அவர் தவெகவுடன் சேர்ந்துவிட்டார்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்து வெளியேறி கட்சியை கைப்பற்றுவார்கள் என்றும், பாஜவின் பி டீமாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தவெக ஆட்சி அமைத்த நிலையில், பெரும்பான்மை இல்லாததால் ஆதரவு கொடுத்து சில பல அமைச்சர் பதவிகளை பெறலாம் என சி.வி.சண்முகம் தெரிவித்த ஆலோசனையை எடப்பாடி ஏற்கவில்லை.
இதனால்தான் சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து அதிமுகவை இரண்டாக பிளவுபட வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது தலைமையில் 28 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் முதலமைச்சர் விஜய் சி.வி.சண்முகம் இல்லத்துக்கே சென்று நன்றி தெரிவித்து உள்ளார். கடந்த அதிமுக பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: அதிமுகவில் நடப்பதை அருகில் இருந்து விளக்கு வைத்து பார்த்தது போல் சொல்வார்கள். அமித்ஷா பேசி விட்டார்.
சி.வி சண்முகம் வெளியேறுகிறார். தங்கமணி வெளியேறுகிறார். எங்கய்யா போனோம்?. உயிர் உள்ளவரை அதிமுக. இது எங்க கட்சி. எங்க கட்சிடா. இது அண்ணா திமுக தொண்டர்களால் நிரம்பிய கட்சி. தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி. தொண்டர்களுக்காக செயல்படுகின்ற இயக்கம். ஆகவே தயவு செய்து மன உறுதியோடு இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள்.
உங்கள் தைரியம் அதிமுகவை 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக உட்கார வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்பு எடப்பாடிக்கு ஆதரவாக பேசிய சி.வி.சண்முகம் தற்போது அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக தவெகவிற்கு ஆதரவளித்து கட்சியை இரண்டாக உடைத்து விட்டதாகக்கூறி அது வேற வாய், இது நாற வாய் என அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
