சென்னை: போதை பொருட்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் நேரடி கண்காணிப்பில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 65 போதை பொருட்கள் தடுப்பு பிரிவு காவல் நிலையங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
‘போதை பொருள் தடுப்பு படை’ காவல் நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும், (12 சென்னை, தலை 2 வீதம் ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி) ஆக மொத்தம் 65 ‘போதை பொருட்கள் தடுப்பு படை’ காவல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த காவல் நிலையங்களில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள், 5 காவலர்கள் என்ற அடிப்படையில், மொத்தம் மாநிலம் முழுவதும் 65 இன்ஸ்பெக்டர்கள், 130 எஸ்ஐக்கள், 325 போலீசார் பணியிடங்களை மறுபணி அமர்வு முறையில் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த பிரிவு, முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும். காவல் நிலையங்கள் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்களின் கீழ் செயல்படும். மாநில அளவில் காவல்துறை கூடுதல் டிஜிபி தலைமையில் இயங்கும். இந்த பிரிவு போதை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் தவறான பயன்பாடு தொடர்பான கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் என உள்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
