சென்னை: சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவை வைத்து எங்கள் உயர்நிலைக் குழுவில் விவாதித்து அதன்பின்னர்தான் முடிவெடுத்தோம். அது தாமதமான முடிவு என்று எல்லோரும் விமர்சிக்கிறார்கள். இடதுசாரி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது, அதேபோல் நாமும் அளிக்கலாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். ஆனால் நாம் விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்காக இயக்கம் நடத்துகிறோம், எனவே அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென நிர்வாகிகள் தெரிவித்தார்கள். இதனால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றார். மேலும் முதல்வராக்க அதிமுக – திமுக மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் முயற்சி மேற்கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தது பேசுபொருளானது.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது, “தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது’ என்று பதிலளித்தேன். திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை. தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சிபீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான். எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாகச் சொல்லப்பட்டது. ஆகவே, ‘எனக்கும் தகவல் கிட்டியது’ என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
